திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற இருக்கிறது. இதனை தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரண்டு நாட்கள் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இன்று காணொளி காட்சி வாயிலாக மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இரண்டு நாட்களில் மாநாடு நிறைவடைந்தாலும் ஒரு வாரம் வரை மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி காட்சியில் மாநாட்டை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் உரையாற்றுகையில், ''தமிழக அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கிறது. கோவில்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோயிலில் குடியிருக்கும் ஒருத்தர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்திருக்கிறார்.
நாள்தோறும் ஆன்மீகப் பெரியவர்கள் அறநிலையத்துறையையும் அமைச்சர் சேகர்பாபுவையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்த வாரியாரும் பாராட்டினார்கள். இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய அடையாளம் தான் பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருக்கிறது.
அந்த வகையில் பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட உடனே அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வரும் பணிகள் பட்டியலை தரச் சொல்லி அமைச்சர் சேகர்பாவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பழனி, திருத்தணி, திருச்செந்தூர் ,மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய ஏழு முருகன் திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை முருகன் திருக்கோவில்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது'' என தொடர்ந்து பேசி வருகிறார்.