கன்னியாகுமரி மாவட்டம் மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சமீர்(34) - ஜெனிபா ஆல்பர்ட்(26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் மீன்பிடித் தொழிலாளி. அதனால் அடிக்கடி மீன்பிடிக்கச் சென்றுவிடுவார்.
இந்த நிலையில், கண்ணாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்க்கும் ஆஷிக் என்பவருக்கும் ஜெனிபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. சமீர் மீன் பிடிக்கச் சென்ற நேரத்தில் ஜெனிபாவும் ஆஷிக்கும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் சில சமீரின் காதுக்கு வர, மனைவி ஜெனிபாவை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி ஜெனிபா அவரது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றும் ஜெனிபா ஆஷிக்கை சந்தித்து அவ்வப்போது தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சமீர் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக ஜெனிபாவின் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஆஷிக் படுத்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அருகே மனைவி ஜெனிபா இருப்பதைக் கண்ட சமீர் ஆத்திரமடைந்து, அருகே கிடந்த கட்டையை எடுத்து ஆஷிக்கை கடுமையாகத் தாக்கியுள்ளார். அதனால் மயக்கமடைந்து கீழே ஆஷிக் சரிந்துள்ளார். இதைப் பார்த்து சமீர் மற்றும் அவரது மனைவி ஜெனிபா இருவரும் பதற்றமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் ஆஷிக்கினை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் போட்டுவிட்டுத் திரும்பியுள்ளனர். அந்த வழியாகச் சென்ற சிலர் ஆஷிக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆஷீக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், நடந்த சம்பவத்தை கண்டுபிடித்து சமீர் மற்றும் ஜெனிபா இருவரையும் கைது செய்துள்ளனர்.