ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர், தொட்டிபாளையம் புதூரை சேர்ந்தவர் தங்கமுத்து (47). டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவருக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தங்கமுத்து, அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் தங்கமுத்து மனைவி பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி, வெள்ளை அரைஞாண் கயிறு, வெள்ளிக் கொலுசு திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் தங்கமுத்து புகார் அளித்தார். வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் திருட்டு நடந்ததால் வீட்டுக்கு வந்து சென்ற யாரோ தான் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
அப்போது தங்கமுத்து வீட்டுக்கு எதிரே வசிக்கும் அவரது உறவினரும், பேக்கரி கடை ஊழியருமான திருமணிகண்டன் (28) என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருமணிகண்டன் திருடியதை ஒப்புக்கொண்டார். எனது மனைவிக்குத் தங்க நகை வாங்க வேண்டி தங்கமுத்து வீட்டில் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். . இதனை அடுத்து அடமானம் வைத்த நகை, வெள்ளிப் பொருட்களை போலீசார் மீட்டு வழக்குப்பதிவு செய்து திருமணிகண்டனை கைது செய்தனர்.