மத்திய பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், நாடு முழுவதற்குமான ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை திரும்ப பெறக் கோரியும் தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக கடலூர் தலைமை அஞ்சலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நாடு முழுவதற்குமான ஒரே தேர்வாக நடத்துவதை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், புவனகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திருமுட்டம் ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர்.திருமாவளவன், கடலூர் ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
அதேபோல் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், எழுத்தாளர் இமையம், வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைவர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கணேஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
இந்த இரு ஆர்ப்பாட்டங்களில் 'ஹைலைட்'டாக கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவின் மாவட்ட பொருளாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன் கலந்துகொண்ட முதல் ஆர்ப்பாட்டமாகும். அதேபோல் கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசனின் மகன் வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் அமைச்சர்களின் வாரிசுகள் களமிறங்கி கண்டன குரலெழுப்பியது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.