விழுப்புரம் தைக்கால் தெருவில் வசித்து வரும் 42 வயது வெங்கடேசன். இவருக்கும் கோலியனூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது நல்ல முறையில் வாழ்க்கை நடத்தி வந்த கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு வெங்கடேசனை விட்டுப் பிரிந்து சென்ற அப்பெண் கோலியனூரை சேர்ந்த கன்னியப்பன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வெங்கடேசன் முன்பு திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து விழுப்புரம், கோலியனூர், பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டி, அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த போஸ்டரில் 'வெங்கடேசனை கல்யாணம் செய்து இருபத்தி ஐந்து வருடமாகுகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் மூலம் பேரன் பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் என்னிடம் இருந்து 15 லட்சம் பணம், 20 பவுன் நகை ஆகியவற்றை எடுத்து சென்று கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கன்னியப்பன் என்பவரிடம் வாழ்க்கை நடத்தி வருகிறார். அவர்கள் இருவரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது” இவ்வாறு அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் விவகாரம் குறித்து வெங்கடேசன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பெண் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் வெங்கடேசனுக்கு முறைப்படி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் எதுவும் இல்லை. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதால் அவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக வெங்கடேசன் இதுபோன்று போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்கின்றனர்.