ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகளையும் அவர்கள் குடும்பத்தினரையும் இழிவாக விமர்சித்த விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் டிசம்பர் 2- ஆம் தேதி சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் ஆஜராகி, கடும் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, கர்ணனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், நீதிபதி கர்ணன் மீதும் அவர் பேசும் வீடியோக்களை வெளியிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்ணன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பார் கவுன்சில் தொடர்ந்துள்ள மற்றொரு வழக்குடன் இணைத்து விசாரிப்பதற்காக, ஜனவரி 22- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.