கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகில் உள்ளது வி.பாளையம் எனும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவருக்கும் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவருக்கும் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்துவந்துள்ளார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். ஊருக்கு வந்த பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் (29.06.2021) இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி தங்கம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் தங்கம்மாள் கத்திக் கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். தங்கம்மாளை அப்படியே போட்டுவிட்டு கணவர் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். ரத்தக் காயங்களுடன் கிடந்த தங்கம்மாளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனிடையே கோபத்தினால் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தலைமறைவான அவரது கணவர் வெங்கடேசன் வீட்டுக்கு வராமல் மனைவி இறந்துவிட்டார், தன்னைப் போலீஸ் கைதுசெய்துவிடுமோ என்று பயந்துகொண்டு பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை புது உச்சிமேடு கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் ஒரு மனிதன் தான் கட்டியிருந்த கைலியால் தூக்குப்போட்டு பிணமாக கிடப்பதாக வரஞ்சரம் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலமாக தொங்கிய உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வெங்கடேஷனின் தம்பியை அழைத்து அவரது உடலை அடையாளம் காட்ட அழைத்துள்ளனர். அதன்பின் போலீஸ் விசாரணையில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தலைமறைவாக இருந்த வி.பாளையம் வெங்கடேசன் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து வெங்கடேசனின் தம்பி மணிகண்டன் வரஞ்சரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.