இந்தியாவில் எம்.பி. தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் மோடி தலைமையிலான அமைத்தது. அடுத்த சில நாட்களிலே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக மக்கள் மற்றும் எதிர் கட்சிகளின் தொடர் இந்தி எதிர்ப்பு முழக்கங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் விமானநிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கறுப்பு மை பூசி இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கண்டோண்மென்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ளது பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம். இங்குள்ள இந்தி எழுத்துக்களை நள்ளிரவில் சிலர் கறுப்பு மை பூசி அழித்துள்ளனர். அதேபோல, திருச்சி தலைமை தபால் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதிகளிலும் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழித்துள்ளனர்.
விமானநிலையம் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும், கண்காணிப்பும் உள்ள பகுதியாகும். எனவே, இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எந்த ஒரு அமைப்பும் இதுவரை இந்தி எழுத்துக்கள் அழிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலிசார் சிசிடிவி கேமிராவின் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திருச்சியில் ஆரம்பித்து வைத்து இருப்பது தற்போது பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.