
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருக்கம்பாடி கிராமத்தில், மாமியார் மற்றும் மனைவியை இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொன்ற கணவனைப் போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த கட்சிக்குத்தான் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (48) என்பவருக்கும், முருக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகள் மகாலட்சுமிக்கும் திருமணமாகி, 15 ஆண்டுகளாகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 9ஆம் தேதி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முருகன், ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ‘எனது மனைவி மகாலட்சுமி என்னிடம் வாழவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையில், ‘கணவருடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை’ என்று மகாலட்சுமி கூறியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் தேதி இரவு முருகன், தனது மாமியார் வீடான முருக்கம்பாடி கிராமத்துக்குச் சென்று மனைவி மகாலட்சுமியிடம், தன்னுடன் வாழ வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதனிடையே, நேற்று முன்தினம் (12.07.2021) இரவு முருகன் மதுபோதையில், மாமியார் வீட்டில் இருந்த மனைவி மகாலட்சுமியிடம் இருந்த நகைகளைக் கேட்டுள்ளார். இதனால், அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த முருகன், ஆத்திரமடைந்து இரும்பு கம்பியால் மனைவி மகாலட்சுமி, மாமியார் சரோஜா ஆகிய இருவரையும் தலையில் அடித்துள்ளார். இதில், தலையில் பலத்தக் காயமடைந்த சரோஜா, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். மகாலட்சுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த மணலூர்பேட்டை போலீசார், தலைமறைவான முருகனை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.