![f](http://image.nakkheeran.in/cdn/farfuture/JAJUhCVbzw_9T1s-aCHnUrBnFuJB1ODqXBwxJMNbtaI/1534007470/sites/default/files/inline-images/forrest.jpg)
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ளது மிட்டாளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள பைரப்பள்ளியை ஒட்டி துருகம் மற்றும் ஊட்டல் பெயர் கொண்ட மலை சார்ந்த காப்பு காடு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளன. ஆந்திர மாநில கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் இந்த காப்புக்காடுகளை ஒட்டியே அமைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் அடர்த்தியானதும், அதிக நீர்நிலைகள் கொண்டது இந்த காப்புக்காடுகள் தான்.
இந்த காப்புக்காடுகளில் பெருங்கானாறு, தேன்கல் கானாறு, ஊறல்குட்டை கானாறு, கம்மாளன் கிணறு கானாறு, ஊட்டல் மலை கானாறு, கொச்சேரி கானாறுகளும், ஜம்பு ஊட்டல், மாடு ஊட்டல், பொழிச்சனேரி, பரமேரிக்கொல்லை ஏரி, தொட்டிக்கிணறு, ரெட்டிக்கிணறு, சேஷவன் கிணறு, ரெங்கையன் கிணறு, கொண்டப்பட்டியான் சுனை, கரடிக்குட்டை போன்ற எக்காலத்திலும் வற்றாத நீர்நிலைகள் உள்ளதால் சிறுத்தை, யானை, கழுதைப்புலி, கரடி, கடமான், புள்ளிமான், காட்டு ஆடுகள், ஓநாய், செந்நாய், குள்ளநரி போன்ற வனவிலங்கினங்கள் மிகுந்து காணப்படுகின்றன.
இந்த காடுகளில் கடமான்கள் மற்றும் புள்ளிமான்கள் அதிக அளவில் காணப்படுவதால், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநில வேட்டைக்காரர்கள் அவ்வப்போது இந்த காப்புக்காட்டுக்குள் வந்து வேட்டையாடுகின்றனர்.
இதனால் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த வனப்பகுதிகளில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, வனவிலங்குகளை பாதுகாக்கவும், வேட்டைக்காரர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ஊட்டல் தேவஸ்தானம் அருகே வனத்துறையின் சார்பில் வேட்டை தடுப்பு குடில் கோபுரம் மூன்றடுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. அதே போல் ஆந்திர மாநில எல்லை இந்த காட்டை ஒட்டியுள்ளதால் ஒவ்வொரு மாதமும் தமிழக நக்சல் தடுப்பு போலீசாரும் வனப்பகுதிக்கு வந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 10ந்தேதி துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் மலை காடுகளை மாவட்ட வன அலுவலர் முருகன் பார்வையிட்டார். சாணிக்கணவாய், தூருசந்து,ஊட்டல் தேவஸ்தானம், வனவேட்டை தடுப்பு குடில் முகாம் ஆகிய இடங்களை பார்வையிட்டவர், அங்குள்ள லிங்காயத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொது மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போடுவதை தடுக்கவும், அது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கவும் கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவரிடம், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த துருகம் காப்புக்காடுகள் பகுதியை ஒரு வனவர் 5 வனக்காப்பாளர்கள், 5 வனக்காவலர்கள் இருக்க வேண்டும். இப்போது இருப்பதோ, 2 வனக்காப்பாளர்கள் மற்றும் ஒரு வனக்காவலர் மட்டுமே உள்ளனர். இதை அரசுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.