வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குசாவடியிலும் இரண்டு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன. தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடியிலும் யாருக்கு வாக்களித்தோம் என தெரிவிக்கும் விவிபேட் என்கிற இயந்திரமும் வைக்கப்படவுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் 1553 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 179 வாக்குசாவடிகள் பதட்டமானவை என வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
![VELLORE LOK SABHA ELECTION 2019 CRPF POLICE ARRIVES](http://image.nakkheeran.in/cdn/farfuture/aU6nKopw5KW4mbQLyZsFo83XfH82hZiUMS0ucWXjIl4/1563896494/sites/default/files/inline-images/CRPF%201.jpg)
அதனை தொடர்ந்து பண நடமாட்டத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்கவும், தேர்தல் சுமூகமாக நடைபெற வேலூர் தொகுதிக்கு இரண்டு கம்பெனிகளை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப் படை) வீரர்கள் வருகை தந்துள்ளனர். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் பகுதிக்கு முதல் கட்டமாக கேரளாவில் இருந்து வந்துள்ள சி.ஆர்.பி.எப் வீரர்கள் மாநில காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 300 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மாநில காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும், மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.