புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டியான சுப்புலட்சுமி (வயது 74). கணவர் இல்லாத நிலையில், தனது மகள் ஜெயா துணையோடு வசித்து வருகிறார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக நடந்துசெல்ல முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 பரிசுத் தொகையை வாங்க, குடும்ப அட்டையில் உள்ள நபர், கைரேகையைப் பதிய வேண்டும் என்று சொன்னதால், நடக்க முடியாத மூதாட்டி சுப்புலட்சுமி, மகளின் கையைப் பிடித்துக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு 3 மணி நேரம் நடந்துசென்றுள்ளார். பொங்கல் தொகுப்பை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்குச் செல்லமுடியாமல் தவித்துள்ளார்.
கொத்தமங்கலம் மேற்கு ரேசன் கடை அருகே நடக்க முடியாமல் மூதாட்டி தவிப்பதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன்கள் நிதின் (வயது 9) நிதிஷ் (வயது 9) ஆகிய இருவரும், வீட்டில் தங்கள் தந்தை வைத்திருக்கும் 3 சக்கர இழுவை வண்டியை இழுத்துவந்து அந்த வண்டியில் மூதாட்டியைப் படுக்க வைத்து, ரேஷன் கடையில் வாங்கிய பொருட்களையும் ஏற்றிக் கொண்டு ஒரு சிறுவன் இழுக்க, மற்றொரு சிறுவன் பின்னால் இருந்து தள்ளிச் சென்று மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இந்தத் தகவல் அறிந்த பலரும் அந்தச் சிறுவர்களைப் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "மூதாட்டிக்கு நடக்க முடியவில்லை. ஆனால், அவர் கைரேகைப் பதிவு செய்தால்தான் பொங்கல் தொகுப்பு என்று சொன்னதால், 3 மணி நேரம் நடந்து வந்து பொங்கல் தொகுப்பு வாங்கிய பிறகு வீட்டுக்குப் போக முடியாமல் தவித்தார். அந்த மூதாட்டியால் மோட்டார் சைக்கிளிலும் அமர முடியாத நிலையில், சிறுவர்கள் தங்கள் வீட்டில் நின்ற வண்டியைப் பயன்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டனர். இதே, வாக்குப் பதிவு நேரம் என்றால், இந்த மூதாட்டியின் ஒரு ஓட்டுக்காக அவரை போட்டிப் போட்டு தூக்கிச் செல்வார்கள். ஆனால், தற்போது அவரது தேவைக்காக நிற்கும் போது யாரும் கண்டுகொள்ளவில்லை" என்றனர்.