இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு ஏராளமான மாணவர்கள், தனியார் நீட் பயிற்சி மையத்திற்குச் சென்று நீட் தேர்வுக்காகப் பயின்று தேர்வுகளை எழுதி வருகிறார்கள். இத்தகைய சூழலில் தான், நீட் தேர்வுக்குப் பயின்று வரும் மாணவர்களைப் பிரம்பால் அடித்தும், காலணிகளை வீசியும் பயிற்சியாளர் செய்த சித்ரவதை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள், மாணவிகள் என இருபாலருக்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இங்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர், வகுப்பில் ஆசிரியர் வருவதற்கு முன்பு சற்று தூங்கியுள்ளனர். இதனைக் கண்ட பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன், மாணவர்களை வரிசையாகப் பிரம்பால் அடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால், மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களைப் பிரம்பால் அடித்துத் துன்புறுத்தும் இந்த சம்பவம், அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அதே போல், மாணவி ஒருவர் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சம்பவம் தொடர்பான வீடியோவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது மாணவி ஒருவர் அவருக்கான இடத்தில் காலணியைக் கழட்டி வைக்காமல் வேறு இடத்தில் கழட்டி வைத்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஜலாலுதீன், வகுப்பிற்கு வந்து காலணியை எடுத்து மாணவியை நோக்கி வீசி அதனை எடுத்து உரிய இடத்தில் வைக்கும்படி கூறியுள்ளார். உடனடியாக, அந்த மாணவியும் காலணியை எடுத்து அந்த இடத்தில் வைத்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மாணவ, மாணவியர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் விசாரணையும் நடத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக யாரும் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்காத நிலையில் மனித உரிமைகள் ஆணையமே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் நீட் பயிற்சி மையத்தின் மீது மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரத்திற்குள் பதிலளிக்கத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.