சிதம்பரம் நகராட்சியுடன் கொத்தங்குடி ஊராட்சி, பள்ளிப்படை, அண்ணாமலைநகர், சி.தண்டேஸ்வரநல்லூர் உள்ளிட்ட 8 ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அம்சா வேணுகோபால் தலைமை தாங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். மேலும் நகராட்சி தற்போது அங்குள்ள மக்களுக்கே சேவை செய்யமுடியாமல் தவிக்கிறது. இந்த நிலையில் தற்போதுள்ள பரப்பளவைவிட 8 மடங்கு கூடுதலான பரப்பளவை இணைத்துக்கொண்டு எப்படி இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வார்கள் எனக் கூட்டத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில், ஊராட்சியை இணைப்பது குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அரசு சார்பில் நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.