Skip to main content

’இன்னும் எத்தனை எத்தனை நிர்மலாதேவிகள் இருக்கிறார்கள்?’ - நீதிபதி மகிழேந்தி வேதனை

Published on 23/08/2018 | Edited on 27/08/2018
j

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவில் வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த கல்லூரியில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் கல்லூரியில் படிக்கும் ஆண்கள் – பெண்களுக்கான விடுதிகளும்,  பேராசிரியர்களுக்கான வீடுகளும் உள்ளன.


இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவிக்கு இணை பேராசிரியர் தங்கப்பாண்டியன் என்பவர், கடந்த 7 மாதங்களாக பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதற்காக பல ஆசைகள் காட்டியுள்ளார். இதுப்பற்றி விடுதி வார்டன்களாகவும் உள்ள பேராசிரியர்கள் புனிதா, மாலதியிடம் புகார் கூறியபோது, அவரது விருப்பத்துக்கு சம்மதிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.

 

தங்கபாண்டியன்

t


இதுப்பற்றிய ஆடியோ ஆதாரத்தோடு திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் புகார் தந்தார் அந்த மாணவி. அந்த மாணவியிடம் கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்ப்ரியா விசாரணை நடத்தியபோது, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும், தீண்டதகாதவள் என பேசியது பற்றியும், திருட்டு பழி சுமத்தியது பற்றி 40 பக்கத்துக்கு வாக்குமூலம் தந்தார்.


அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 22ந்தேதி மதியம் கல்லூரிக்கு சென்ற நீதிபதி மகிழேந்தி, சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினார், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர், டீன் ராஜேந்திரனிடம் விசாரித்தார். பெண்கள் விடுதியை கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்ப்ரியா ஆய்வு செய்தார். ஆய்வில் கிடைத்த தகவலின்படி, குற்றம்சாட்டிய மாணவியின் அறைக்கு உள்தாழ்ப்பாள், வெளிதாழ்ப்பாள் கிடையாது என்பது உறுதி என்றார். கல்லூரி மாணவ – மாணவிகளை பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராக தூண்டிவிட்டு விடுமுறை நாளில் போராட்டம் நடத்துகிறீர்கள், போலியாக ஆவணங்களை உருவாக்கி வைத்துள்ளீர்கள் என கண்டித்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, அந்த பெண் புகார் கூறியுள்ளார், விசாரணை நடக்கிறது. காவல்துறைக்கு புகாரை அனுப்பியுள்ளேன். தமிழக கல்லூரிகளில் இன்னும் எத்தனை எத்தனை நிர்மலாதேவிகள் இருக்கிறார்கள் என தெரியவில்லை என வேதனைப்பட்டார்.


நாம் இது தொடர்பாக கோயம்பத்தூர் வேளாண்மை பல்கலைழக பதிவாளரை தொடர்பு கொண்டபோது, அவர் விடுமுறையில் உள்ளார் என்றவர்கள், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி விடுதியில் குறிப்பிட்ட மாணவி செல்போன் திருடினார். அதுக்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை விடுதியை விட்டு வெளியே அனுப்ப கடிதம் அனுப்பப்பட்டது, அந்த மாணவியோ, அவரது பெற்றோரை பெறவில்லை என்கிற தகவல் தான் எங்களுக்கு டீன் அனுப்பியுள்ளார். மற்றப்படி செக்ஸ் டார்ச்சர் பிரச்சனை பல்கலைக்கழகத்துக்கு தெரியாது. மீடியா, செய்தித்தாளில் வந்தபிறகே தெரியும். இனிமேல் தான் விசாரிக்க வேண்டும் என்றார்கள்.


இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 23ந்தேதி, பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆண் பேராசிரியர்கள் பலரின் செல்போனை வாங்கிய டீன் ராஜேந்திரன், அதை ஆய்வு செய்துள்ளார். இங்க நடக்கறதைப்பத்தி வெளியில யாராவது சொன்னா உங்களை ஒழிச்சிடுவன் என மிரட்டியவர் மதியம் 3 மணியளவிலேயே செல்போன்களை திரும்ப ஒப்படைத்துள்ளார்.  அதோடு, காலை முதல் அந்த மாணவிக்கு எதிராக பேராசிரியர்களுக்கு ஆதரவாக மாணவ – மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன் கோஷம் எழுப்பி வருகின்றனர். போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்