அரபிக்கடலில் உருவான புயலுக்கு மகா என பெயரிடப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள 'மகா' புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மதுரை, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.