தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது இன்று (11.11.2021) மாலை மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அதேபோல், டெல்டா மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், இன்று (11ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (12ஆம் தேதி) நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மழையின் காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.