திருச்சி மண்டல குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் அறிவுறுத்தலின் படி கடந்த 31 ஆம் தேதி திருச்சி காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் லால்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லக்குடி அருகே மால்வாய் செல்லும் சாலையில் உள்ள பயன்பாடற்ற கட்டடம் அருகே வெள்ளை நிற மூட்டைகளுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், ரேஷன் அரிசி மூட்டைகளைக் கள்ளத்தனமாகப் பதுக்கி வைத்திருந்த கல்லக்குடி மேல அரசூரைச் சேர்ந்த கணேசன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சுமார் 20 மூட்டைகளில் 50 கிலோ வீதம் சுமார் 1000 கிலோ அரிசி கள்ளத்தனமாகப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பின் கள்ளத்தனமாக வைத்திருந்த ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்ததோடு, கணேசனையும் கைது செய்து வழக்குப் பதிந்து பின் சிறையில் அடைக்கப்பட்டார்.