Skip to main content

‘வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு” - எடப்பாடி பழனிசாமி கருத்து! 

Published on 03/08/2024 | Edited on 03/08/2024
Historic judgment Edappadi Palaniswami opinion

உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு, பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை நேற்று முன்தினம் (01.08.2024) வழங்கினர். இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும்,  எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்த இயக்கம் அதிமுக. இட ஒதுக்கீடு கொள்கையைத் தமிழகத்தில் 100 சதவீதம் அமல்படுத்தி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இன்றுவரை பயனடைந்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அதிமுக தான். எனவே தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாஆகியோரது பெயர்கள் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்.ஜி.ஆர்.. கடந்த  1991-96 ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து,  ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தைப் பெற்றவர் ஜெயலலிதா ஆவார்.

Historic judgment Edappadi Palaniswami opinion

தமிழக அரசு, 2009 ஆம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையிலான வழக்குகள் 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திட்டமிட்டுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த உள் இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

இருப்பினும் அதிமுக அரசு அருந்ததியர் மக்களுக்கான உள் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய ஆதிதிராவிடர் நலச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி அதிமுக அரசு சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுத் திறம்படக் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்குச் சாதகமான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

Historic judgment Edappadi Palaniswami opinion

பின்பு இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதிமுக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இன்றைய தமிழக அரசும் வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில், 'அரசியல் சாசன 14-ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை; பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை; பட்டியல் இனத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை. எனவே, பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என்ற தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு 01.08.2024 அன்று வழங்கியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் நீதிபதி அருண்மிஷ்ரா அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்புதான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வழக்கில் அதிமுக எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்