விழுப்புரம் மாவட்டம், சென்னை - கடலூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் பேரூராட்சியில் உள்ள தர்மபுரி வீதியில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு வழிபாடு செய்ய முத்துப்பட்டி கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்வார்கள். மேலும் இந்தக் கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழா தினசரி வழிபாடு ஆகியவற்றை இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப நிதி வசூல் செய்து அதன் மூலம் நிர்வாகம் செய்து வருகிறார்கள். வசூல் செய்த தொகையில் ஆண்டுதோறும் 21 நாட்கள் வெகு விமரிசையாகத் திருவிழா நடத்துவது வழக்கம்.
மேலும் திரௌபதி அம்மன் கோவில் சுமார் 150 ஆண்டு பழமையான நிலையில் இந்த கோயிலை தற்போது இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கண்ட அப்பகுதி மக்கள், எங்கள் அனைவருக்குமான பொதுக் கோயில் இது. இதற்குத் தனிப்பட்ட முறையில் எந்த சொத்து வருமானம் கிடையாது. எங்கள் வருமானத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயிலைப் பராமரிப்பு செய்து திருவிழா உட்பட அனைத்து உற்சவங்களையும் நடத்தி வருகிறோம். இந்நிலையில் ஊர் மக்கள் ஒற்றுமையுடன் ஆண்டுதோறும் அமைதியான முறையில் திருவிழா நடத்தி பராமரித்து வந்த கோயிலை, அறநிலையத்துறையில் எடுத்துக் கொண்டு அதன் கட்டுப்பாட்டில் விழா நடத்த வேண்டும் என்று யாரோ அளித்த புகார் மனுவின் அடிப்படையில் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடத்தினார்கள்.
இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை வருவாய்த்துறையினர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆண்டு திருவிழா நடத்திக் கொள்ளலாம் அதில் காவல்துறை, வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட மாட்டார்கள். அடுத்த ஆண்டு திருவிழாக்கள் நீதிமன்றத்தை நாடி கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழா நடத்துவது சம்பந்தமாக உத்தரவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருவிழா நடத்தி முடித்தவுடன் கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தை அணுகப் போவதாக முடிவு செய்துள்ளனர். கோவிலைப் பாதுகாக்க நடத்திய போராட்டம் மரக்காணம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.