கேரள பாலக்காடு பகுதி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஸ்ரீனிவாசன் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டி இந்துமகா சபாவின் தமிழக தலைவர் பாலசுப்பிரமணியன் பேசிய பேச்சு பிற மதத்தினரைப் புண்படுத்தி அவர்களை மிரட்டும் வகையில் இருந்ததாகவும் மதமோதலை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாகவும் குமரி மாவட்டம் புதுக்கடை போலீசார் ஏப்ரல் 25-ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் கூறுகையில், "முள்ளுவிளை பகுதியில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட பாலசுப்பிரமணியன், விழா முடிந்ததும் தனது கட்சி நிர்வாகிகள், அந்தப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மத்தியில் கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, “இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நமது கடமை. கேரளாவில் ஒருத்தனை வெட்டுனா அவன் திருப்பிப் போய் ஒருத்தனை வெட்டுவான். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இருக்கக்கூடாது. நம்மாளு ஒருத்தன் போனா 10 பேரு அவன் போகணும்.
அடியாத மாடு படியாது. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான். பலம் உள்ளவர்களாக நம்முடைய மக்களை மாத்தணும். கலியுகத்தில் பலம் என்பது என்ன? சண்டை போடுறதுதானே. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை வெறுக்கணும்கிறது நம்ம நோக்கம் அல்ல. அவர்கள் நம்மை தாக்காதவண்ணம் பாதுகாத்துக் கொள்ளணும். நம்ம அவன் கிட்ட சண்டைக்கு போகவேண்டாம். நம்மைப் பாத்தாலே அவனுக்கு ஓ இந்தக் கூட்டத்துல கை வைக்கக்கூடாது. இது சாதாரணக் கூட்டம் இல்ல, தொட்டா தூக்கிடுவாங்கனு நெனப்பு இருக்கணும்” என அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இது மற்ற மதத்தினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் உதவி ஆய்வாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தோம்” என்றனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மா.செ. திருமாவேந்தன் கூறும்போது, “கேரளாவில் நடக்கிற அரசியல் கொலைகள் போன்று அமைதியாக இருக்கிற தமிழகத்திலும் நடக்க வேண்டுமென்று தூண்டிவிடுகிற விதமாக பாலசுப்பிரமணியனின் பேச்சு உள்ளது. அவர் இந்த மாதிரி பேசியிருக்கிறார் என வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டதே அவருடைய கட்சியினர்தான். ஏற்கனவே பாதிரியார் ஒருவர் பேசியபோது போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தார்களோ, அதைப்போல்தான் சரியான நடவடிக்கையை பாரபட்சமின்றி எடுத்திருக்கிறார்கள். இதோடு விட்டுவிடாமல் இந்துமகா சபாவை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்” என்றார்.