Skip to main content

கோவையில் ஒட்டப்பட்ட சீக்ரெட் மெசேஜ்; பரபரப்பை கிளப்பிய இந்தி போஸ்டர்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Hindi poster has been run across Coimbatore urging people to vote for Modi

தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலையொட்டி வாக்களர்களை கவரும் வண்ணம் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர பிரச்சாரங்கள் நடந்து வரும் அதே சமயத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் வட இந்தியர்களின் வாக்குகளை குறி வைத்து இந்தி மொழியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை விதிகளை மீறிய வகையில் ஒட்டப்பட்டிருக்கும் இந்தப் போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் கொடிகளோ அல்லது சின்னங்களோ எதுவுமே இல்லாமல் அந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தக் கட்சியைச் சார்ந்த தலைவர்களின் புகைப்படங்கள் கூட இல்லாமல் அந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஏதோ, கோவில் நிகழ்ச்சி தொடர்பாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் போல இருந்துள்ளது. இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், தேர்தல் பிரச்சார வாசகங்களுடன், கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

வட இந்திய ஒற்றுமை மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் இந்த முறை வட இந்தியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். நமது குஜராத்தின் சிங்கம் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் முற்றிலும் விசுவாசமானவர். பிஜேபி ஜெயிக்கட்டும். அதன் பிறகு சில நாட்களில் நமது மோடி கோயம்புத்தூர், திருப்பூரையும், குஜராத்தோடு இணைப்பார். மோடி இருந்தால் அது சாத்தியம். இது ஒரு பொன்னான வாய்ப்பு. திராவிடக் கட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற, மோடி சொல்பவருக்கு வாக்களிக்களியுங்கள். மோடிக்காக வாக்களியுங்கள். நமது குஜராத்திற்காக வாக்களியுங்கள். நமது உத்தரப்பிரதேசத்திற்காக வாக்களியுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்... பாரத் மாதா கி ஜே.. என அந்தப் போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவையில் அரசியல் கட்சிகளின் சார்பாக இவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது தேர்தல் நடத்தை விதியும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவது பெரும் சர்ச்சையை உண்டு செய்துள்ளது.

இதற்கிடையே, இந்தப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மனு கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “அமைதியாக இருந்து வரும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே கோவையில் வட மாநில தொழிலாளர்களை அடித்து துன்புறுத்தியதாக சமூக வலைத்தளத்தில் பழைய காட்சிகளை பகிர்ந்து, சமூக விரோதிகள் தமிழ்நாட்டு மக்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தினர். மக்களிடையே பிளவுபடுத்துவதற்காக இது போன்ற இந்தி மொழியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தப் போஸ்டர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

சார்ந்த செய்திகள்