இந்தியா முழுவதும் கரோனா மூன்றாம் அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு ஒருபுறம் மிரட்டுவதால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த அலையில் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 15 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இருந்தும், அடிக்கடி மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறிய வயது பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் ஹிந்தி தேசிய மொழி என்று கூறிய ஆசிரியரிடம் இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று தன்னுடைய குழந்தை மொழியில் தெரிவிக்க, சுதாரித்த ஆசிரியர் தவறை உணர்ந்து 'வெரி குட்' என்று அந்தக் குழந்தையைப் பாராட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.