உடல்நலம் குன்றிய மகனை பார்க்க விடுப்பு வழங்காததால் பணியை ராஜினாமா செய்யப்போவதாக பள்ளிக்கரணையை சேர்ந்த காவலர் பாரதி என்பவர் தன் முகநூலில் வீடியோவாக பதிவிட்டுள்ளது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
அந்த வீடியோவில் காவலர் பாரதி கூறியதாவது,
பையனுக்கு ஆப்பரேஷன் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று விடுப்பு வேண்டும் என இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டும் அதை ஏற்காமல் நான் பொய் சொல்வதாக கூறினார். நான் என் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டரிடம் போன் செய்து தருகிறேன் பேசுங்கள் என்றேன். அதுவும் முடியாது என தெரிவித்துவிட்டார். உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்று கூறினார்.
அதேநேரத்தில், மருத்துவமனையிலிருந்து அழைப்பு, உங்கள் பையன் ரொம்ப அழுகிறான், நீங்கள் இருந்தால் சரியாக இருக்கும் உடனடியாக வாருங்கள் என்று கூறினர். நான் உடனடியாக இதனை மடிப்பாக்கம் உதவி ஆணையாளரிடம் தெரிவித்து விடுப்பு கேட்கிறேன், அவரோ 2 நாட்கள் சென்று வருமாறு கூறினார். நான் 2 நாட்கள் போதாது.. ஒரு வாரம் பையனுடன் இருந்துவிட்டு வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவரோ அவ்வளவு நாள் விடுப்பு தர முடியாது என்று மறுத்துவிட்டார். அவர் மறுத்ததும் துணை ஆணையாளரிடம் போய் அனுமதி கேட்க சென்றேன். அவரும் என் கஷ்டத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இதன் பின், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளவா? இல்லை வேலையை விடவா? என்று யோசித்து ஊருக்கு சென்று விட்டேன். பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் பணிக்கு திரும்பினேன். ஆனால் அவர்கள் பணியை தொடரமுடியாது. உனக்கு விடுமுறை போடப்பட்டுள்ளது என என்னை நிறைய அழைய விட்டனர். சரி இவ்வளவு அழைந்தும், நிறைய கஷ்டப்பட்டப் பின்னரும் ஏன் இந்த வேலையில் இருக்க வேண்டும்? இவர்களிடம் எதற்காக இப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். வேலை செய்வதே குடும்பத்தினருக்காக தான். ஆனால் அவர்களுக்கு முடியாத சமயத்தில் உடனிருந்து பார்க்கக் கூட முடியவில்லை பின் எதற்கு இந்த வேலை? சொந்த ஊர் சென்று வேறு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் என அதில் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.