நீதியரசர் கலையரசன் விசாரணை குழுவின் அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்த போது, முறைகேடு செய்ததாக சூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், இதை விசாரிப்பதற்காக நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைத்தது கடந்த அ.தி.மு.க. அரசு. இந்த ஆணையத்தை எதிர்த்து, சூரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், விசாரணை நடைபெறுவதாகவும், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு தெரியாமலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே. இந்த விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், தனக்கு அறிக்கை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (11/02/2022) நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை ஆணையத்தின் அறிக்கை பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப முடியும். அதன் மீது அவர் தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரரான சூரப்பாவுக்கு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு தர முடியாது என்றும் மனுதாரருக்கு கூற முடியாது என்றும், அதில் என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து, அவர் விளக்கு அளிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டறிவது அரசின் கடமை என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநருக்கு அறிக்கையை அனுப்புவதற்கு முன்பாகவே, அடுத்த இரண்டு வாரங்களில் இந்த அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும். அறிக்கை கிடைத்த நான்கு வாரங்களில் சூரப்பா அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.