Skip to main content

கனிமவளங்கள் கொள்ளையைத் தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

High Court orders installation of surveillance cameras at state and district boundaries to prevent mineral plunder

 

 

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் கனிம வள கொள்ளை, நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு, இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால், அரசுக்கு சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

 

மேலும், இந்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்திற்கு அளித்திருந்தது. இதையடுத்து, சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணர் குழு அமைத்து, இழப்பீடு தொடர்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி, தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுக்கள், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராஃபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் தொடர்ந்து சட்டவிரோத கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கனிம வளங்கள் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தாலும், அதனை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் சுரண்டப்பட்ட கனிமவளங்களில், இதுவரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2014- ஆம் ஆண்டுக்கு பின் பதிவு செய்யப்பட்டுள்ள 70 வழக்குகளின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதலளித்த அமலாக்கத்துறை, இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலருடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, கனிமவளக் கொள்ளைகளைத் தடுக்கும் வகையில், அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

மேலும், கனிமவளக் கொள்ளைகளைத் தடுக்க எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 9- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்