சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது ஆண்டுக்கு 2 லட்சத்தில் இருந்து 3 கோடியே 25 லட்சம் வரை வருவாய் கிடைக்கப்பெற்றது. இத்தகைய சூழலில் தான் 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கோவில் பொறுப்புகள் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில்களில் எவ்வித துறை அனுமதியின்றியும், நீதிமன்றத்தால் மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைத்த குழுக்களின் அனுமதியும் பெறப்படாமல் கட்டடங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டுமானங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து கோயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்போது துறை அனுமதியோ, உயர்நீதிமன்ற அனுமதியோ இல்லாமல் எந்த ஒரு பராமரிப்பும் பணி மேற்கொள்ளக்கூடாது எனவும், பொது தீட்சிதர்கள் கோயிலின் கணக்கு வழக்குகளைச் சரிவரப் பராமரிக்கப்படவில்லை. எனவே கோவிலில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (05.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் சார்பில் கோவிலின் ஆண்டு வருமானம் தாக்கல் செய்தனர். அதாவது கடந்த 2022- 2023ஆம் ஆண்டுக்கான வருமானமாக 2 லட்சத்து 9 ஆயிரம் 120 ரூபாய் என வருமான வரி கணக்கு தாக்கல் செய்த கணக்கை நீதிமன்றத்தில் தக்கல் செய்தனர்.
இதற்கு அரசு தரப்பில், “தில்லை சபாநாயகர் கோவில் உள்ளே தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலின் ஆண்டு வருமான 28 லட்சம் ரூபாய் முதல் 32 லட்சம் ரூபாய் வருகிறது. இவ்வளவு புகழ் பெற்ற கோவிலுக்கு இவ்வளவு குறைவாக வருமானம் வர வாய்ப்பு இல்லை” என வாதம் முன்வைக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கடந்த 2014-2015 ஆண்டு முதல் முதல் 2023-2024ஆம் ஆண்டுகள் வரையிலான வருவாய் குறித்த கணக்குகளைச் செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.