
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அப்போது மார்ச் 27ஆம் தேதி (27.03.2021) கருங்குளம் மற்றும் கோழிபத்தி கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயத்தில் தேர்தல் விதிகளை மீறி கொடிக் கம்பங்களை நட்டும், தோரணங்களைக் கட்டியும் பிரச்சாரம் செய்ததாகவும், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதோடு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி 15 வாகனங்களில் பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி இது தொடர்பான இரு வழக்குகள் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை எதிர்த்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் அமர்வில் இன்று (21.03.2025) விசாரணை நடைபெற்றது.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வாதிடுகையில், “ஒருவழக்கில் அதிகபட்சமாக ஒரு ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும். மற்றொரு வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்கப்படும். மூன்றாண்டுகள் தாமதமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை எற்றுகொண்ட நீதிபதி இளந்திரையன் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போன்று திருச்சி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜுக்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.