தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட பணிகளை மூன்றாவது நபருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மன்சூர் அலிகான் தொடர்ந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் வாதிட்ட மன்சூர் அலிகான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இதுவரை வலுவாக உள்ள நிலையில் சமீப காலங்களாக மூன்றாவது நபர்களுக்கு ஒப்பந்தம் வழங்கி செயல்படுத்தப்படும் கட்டுமானங்கள் பலமற்று உள்ளதாக வாதிட்டார்.
மேலும், தமிழக அரசு உலக வங்கியிடம் 6 லட்ச கோடி கடன் பெற்றும் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாதது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதுவரை சென்னை - சேலம் 8 வழி சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் இந்த குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஒரு ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தனர். மேலும், பத்திரிக்கை செய்தியின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.