திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், அதே வேளையில், இது போன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்சனைகளும் ஏற்படும்.
குறிப்பாக சொத்து, வாரிசுரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், அரசு உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களில் உள்ள விண்ணப்பங்களில் சாதி, மதம் குறித்த விவரம் கோரும் இடத்தை பூர்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விட உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
மேலும், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.