Skip to main content

மதுரை சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு! - 10 கோரிக்கைகளை மனுவாக கொடுத்த முகிலன்..!

Published on 21/08/2018 | Edited on 21/08/2018


சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த 335 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இதில் குறிப்பாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார். மதுரை சிறையில் முகிலனுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை சுட்டிக்காட்டி ஏற்கனவே திருச்சி வழக்கறிஞர் கென்னடி நீதிப்பேராணை மனு (writ petition) ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு கடந்த 17.8.2018 அன்று இரண்டாம் விசாரணைக்கை வந்தது. அன்று வழக்கறிஞர் அழகுமணி, முகிலன் சார்பாக ஆஜரானார். அப்போது முகிலன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை நடக்கிறது, சிறையில் மனித உரிமை மீறப்படுகிறது என வாதிட்டார். எனவே ஒரு தலைமை குற்றவியல் நடுவர் (CJM) ஒருவர் முகிலன் மீதான தனிமை சிறை சித்ரவதைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன் அவர்கள் தானே சிறைக்கு சென்று ஆய்வு செய்வதாக கூறினார். அதனடிப்படையில் கடந்த 18.8.2018 அன்று மாண்புமிகு நீதிபதி சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று முகிலனை விசாரித்தார். நீதிபதி முகிலனின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடங்கள் ஆய்வு செய்தார்.

மேலும் முகிலனும் தனது குறைகளையும் தன் மீதான சித்ரவதைகளையும் எழுத்துப் பூர்வமாக நீதிபதி அவர்களிடம் தந்துள்ளார். அதாவது.. 1. மதுரை மத்திய சிறையில் முழு நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். தற்போது சுமார் 3 மணி நேரமே மருத்துவர்கள் உள்ளனர்.

2. சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் வெறும் ஊசி, மருந்து (தூங்க செய்வது) மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவர்களின் மனநல குறைப்பாட்டை சரி செய்ய போதிய மருத்துவ வசதி வேண்டும்.

3. சிறையில் அனைத்து கழிவறைகளிலும் தண்ணீர் செல்லும் வகையில் சரி செய்தல், கழிப்பறை தொட்டிகள் உரிய முறையில் மூடப்பட வேண்டும். கழிவறைகள் அனைத்தும் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட வேண்டும்.

4. மதுரை நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை லோக் அதாலத் நடைபெறுகிறது, அதை 2 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரணை சிறைவாசிகளுக்கு லோக் அதாலத் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

5. மத்திய சிறைகளில் மாவட்ட ஆட்சி தலைவர், சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள் முறையான கால இடைவெளியில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

6. சிறைவாசிகளுக்கு அறிவொளி இயக்கம் போல் கல்வியறிவு பெற வசதி செய்ய வேண்டும்.

7. சிறைவாசிகள் ஒவ்வொருவருக்கும் சிறையில் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. சிறையில் தொலைபேசி பேச (ஒரு மாதம்) ரூ.45ஐ ஒரு மாதத்தில் அனுமதிக்கப்பட்ட உரையாடல் செய்யும் வகையில், கட்டிய தேதியில் இருந்து ஒரு மாதம் பேச ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது அவ்வாறு இல்லாமல் உள்ளது.

9. சிறையில் உள்ள தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் தமிழில் பொதிகை தெரியும் படி ஏற்பாடு செய்ய வேண்டும். 3 மணி நேரம் மட்டுமே தமிழில் தெரிகிறது, மற்ற நேரங்களில் இந்தி மட்டுமே ஒளிப்பரப்பப்படுகிறது. இது இந்தி திணிப்பாகும்.

10. சிறையில் வழங்கப்படும் உணவுகள் தரம் மற்றும் அளவு முறையாக இல்லை இதை சிறை விதிப்படி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என 10 கோரிக்கைகளை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞருக்கு நினைவுச் சின்னம் நிறுவுவது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் (படங்கள்)

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞரின் நினைவாக பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சீமான், திருமுருகன் காந்தி, முகிலன் உள்ளிட்டவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராகப் பேசியதால் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

 

Next Story

ஜாமீனில் வெளியே வந்தார் முகிலன்

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

திருச்சி மத்திய சிறையிலிருந்து முகிலன் ஜாமீனில் வெளியே வந்தார். முகிலனின் மனைவி தலைமையில் அவரை மாலை அணிவித்து வரவேற்றனர்.

 

  Mukilan was released on bail

 

சமூக ஆர்வலர் முகிலனுக்கு பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கடந்த 13 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவுபிறப்பிக்கப்பட்ட  நிலையில் சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் தற்பொழுது திருச்சி மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.