திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் நாளை (22.08.2024) வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். விழாக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில் இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்” எனத் தெரித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (21.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) தெரிவிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த தொழிற்சங்கம் சார்பில், “இது தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறோம்” எனத் தெரிவித்தது. இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒப்பந்தம் முறையிலோ, தற்காலிகமாகவோ காலி இடங்களை நிரப்ப அறிவுறுத்தி இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.