தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் மாகத்மா காந்தி, திருவள்ளுவரைத் தவிர வேறு எந்தத் தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். இந்தச் சுற்றிக்கைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போன்று கல்லூரி மாணவர்களும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், “புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப் படம் அல்லது திருவுருவச்சிலை போன்றவற்றை நீதிமன்ற வளாகங்களில் நிறுவிடக்கூடாதெனவும் ஏற்கனவே அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அப்புறப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடைபெறும். தோழமைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.