Skip to main content

உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள்  திமுகவுடன் கூட்டணியை  தொடர்வோம் - ஈஸ்வரன்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

"தமிழகத்தை ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள் பா.ஜ.க.வின் பினாமியாகத்தான் செயல்படுவேன் என அடம் பிடித்து ஆட்சியை நடத்துகிறார்கள்" என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார். அவர் இன்று மேலும் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.  கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த உள்ளோம்.

 

e

 

அதேபோன்று திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் ஈரோடு  வந்து தீரன் சின்னமலை நினைவு நாளில் பங்கேற்கிறார்.  தற்போது அவர் வேலூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு  செயல்படுத்தி வருகிறது.  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டேன் என்றார்.   தமிழகத்தில்  விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன் என்றார். ஆனால் அவர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியின்  அதிமுக  அரசு மத்திய  பாரதிய ஜனதா அரசை எதிர்க்க துளியும்  துணிவில்லாமல் உள்ளது.

 

எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக செயல்படுகிறார்.  உயர் மின் கோபுர திட்டத்தை விவசாயிகள் பாதிக்காத வகையில்  கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இருந்த 37  எம்.பி.க்களை விட தற்போது உள்ள திமுக   கூட்டணி எம்பிக்கள் போர் குணம் மிக்கவர்கள், மாநில உரிமைக்காக, தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.  மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை  கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியின் கருத்தை கேட்க வேண்டும்.  முத்தலாக் மசோதா சட்டத்தை ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் ஒரு சிலர் ஆதரிக்கிறார்கள் எனினும் இந்தச் சட்டம் பெண்களைப் பொறுத்தவரை பயனளிப்பதாக இருக்கும்.

 

கொமதேகவை பொறுத்தவரை எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி அவர்களின் நலனுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம், விவசாய மக்கள் மற்றவர்களைப் போல் சரி சமமாக வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.  கொ .ம.தே.க  பொறுத்தவரை நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தற்போது நாங்கள் தொடங்கியுள்ளோம்.  ஈரோடு மாவட்டத்திலும் இந்த பணிகளை நாங்கள் விரைவில் தொடங்க உள்ளோம்.


உள்ளாட்சித் தேர்தலை நடத்த  அதிமுக அரசு தயங்குகிறது.  இதனால் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய பல ஆயிரம் கோடி வராமல் உள்ளது.  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள்  திமுகவுடன் கூட்டணியை  தொடர்வோம்" என்றார். 
 

சார்ந்த செய்திகள்