![Help from Nakkeeran Internet News to Virudhunagar Girl](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wo8vNnPGhSWrTpqLASqbKn7pHbzyf3yOW47KeWfxjCk/1642484926/sites/default/files/inline-images/th-1_2614.jpg)
"படிக்கனும்னு ஆசையா இருக்குண்ணா," இப்படி பலரது மனதையும் பிழிந்தெடுக்கும் வகையில் மழலையின் ஏக்கத்தை நக்கீரன் இணையத்தில் வீடியோ செய்தியாக பதிவிட்டிருந்தோம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குருபாக்கியம். கணவனால் கைவிடப்பட்ட இவர், வலிப்பு நோயாளியாக இருக்கிறார். இவருக்கு ஒன்பது வயதில் மகாலெட்சுமி என்கிற பெண் குழந்தையும், சுரேஷ் என்கிற மகனும் உள்ளனர். குடும்பத்தின் வறுமையினால் சுரேஷ் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சித்தால் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காத்துவருகிறார். மகாலெட்சுமியோ படிப்பை ஒதுக்கிவைத்துவிட்டு தாய் குருபாக்கியத்திற்கும், அண்ணன் சுரேஷுக்கும் தாயாக இருந்துவருகிறார். அந்த இளம்தளிரின் சோகத்தை யாரும் கண்டிடாத சூழலில், ‘நாங்களும் இருக்கிறோம்’ என்கிற அமைப்பின் நண்பர்கள் மூலம் நமக்கு தகவல்கிடைக்க, அவர்களின் சோகத்தை வீடியோவாகப் பதிவிட்டு நக்கீரன் இணையத்தில் பதிவிட்டதோடு விருதுநகர் ஆட்சியர், தொகுதி எம்.எல்.ஏ.வின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். செய்தியினைப் பார்த்த சமூக ஆர்வலர்களும் மனிதநேயமிக்கவர்களும் அடுத்தடுத்து அவர்களுக்கு உதவிகளைச் செய்தனர். நக்கீரன் வாசகர்களும் அவர்களின் வங்கிக் கணக்கை நம்மிடம் பெற்று இயன்ற உதவிகளைச் செய்தனர்.
விருதுநகர் ஆட்சியரோ முதற்கட்டமாக தாசில்தார், மற்றும் கிராமநிர்வாக அதிகாரிகளை அனுப்பி மகாலெட்சுமி மற்றும் அவரது தாயார் குருபாக்கியத்தையும், அண்ணன் சுரேஷையும் பார்க்கச் சொன்னதோடு அவர்களுக்கு முதற்கட்ட உதவிகளைச் செய்ய சொல்லியிருந்தார். ஆட்சியரின் உத்தரவுப்படி நேற்று முன்தினம் அங்கு வந்து உதவிசெய்துவிட்டுச் சென்றனர்.
இந்தநிலையில் நேற்று (17ம் தேதி) காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகள், மருத்துவர் சகிதம் வந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள், மூன்று மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், ஆட்சியர் நிதியிலிருந்து 15,000 ரூபாய் ரொக்கம், சுரேஷ் ஆன்லைன் வகுப்பு மூலம் படிப்பதற்கு செல்போன் ஒன்றையும வாங்கி வந்து கொடுத்தனர்.
மேலும் அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “இனிமேல் நீங்க கவலைபடாதீங்க. சமத்துவபுரத்தில் அனைவருக்கும் வீடு தயாராகியிருக்கிறது. அங்கு உங்களுக்கு வீடு ஒதுக்கித் தருகிறோம். நீங்கள் அங்கு சவுகாரியமாக இருக்கலாம்" என்றார். அதற்கு குருபாக்கியமும் அந்த பிள்ளைகளும், “இங்கயே இருந்துட்டோம், ஏதாவது ஒன்னுன்னா இங்க உள்ளவங்க ஓடிவந்து உதவுவாங்க, அங்க யாரையும் தெரியாது. இங்கயே ஒரு இடம் தாங்க” என்று கூற, ஆட்சியர் சற்றும் யோசிக்காமல், “பக்கத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் பட்டா தருகிறோம், அதோடு வீடு கட்டுவதற்கான வசதிகளையும் செய்து தருகிறோம்” என உத்தரவாதம் கொடுத்ததோடு அருகில் இருந்த மருத்துவர்களிடம் நாளை அவர்களுக்கு உண்டான சிகிச்சையை அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இது குறித்து ‘நாங்களும் இருக்கிறோம்’ அமைப்பின் சாதிக்கிடம் கேட்டோம், “எங்களின் கவனத்திற்கு வந்ததை வெளியுலகத்திற்கும், ஆட்சி அதிகார மட்டத்திற்கும் கொண்டுசென்றது நக்கீரன்தான். விளிம்புநிலையில் கவனிப்பாரற்று இருந்த அந்த உயிர்களின் நிலையறிந்து செய்தி வெளியிட்டதற்கு முதலில் கோடான கோடி நன்றியை நக்கீரனுக்கு காணிக்கையாக்குகிறோம். எங்களோடு சேர்ந்து நான்கு அமைப்புகள் அவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்தோம். நக்கீரனால் அதிகார மட்டத்தின் காதில் பட்டுவிட்டது. இனிமேல் அந்தக் குடும்பம் காப்பாற்றப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. ஆட்சியர் வந்து அனைத்து நல உதவிகளும் செய்துகொடுத்துள்ளார். திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரடியாக வந்து உதவிகளைச் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், அவர்களின் குடும்பத்திற்கு உதவுவதாக கூறியிருக்கிறார். அதோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வருவதாகக் கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் நக்கீரன்தான். இந்தச் செய்தியை உலகறியச் செய்து விளிம்பு நிலையில் வறுமையில் வாடிக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளுக்கு உதவிக்கிடைத்திட செய்த நக்கீரனுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்" என்கிறார் ஆனந்தமாக.