பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.