சேலத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் மூழ்கி, இரண்டு மூதாட்டிகள் பரிதாபமாக பலியாயினர்.
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் அங்கிருந்து வரும் நீர், அடிவாரப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரம்புகிறது. மலை அடிவாரத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், அங்கிருந்து வெளியேறும் உபரிநீர், அஸ்தம்பட்டி பகுதிகளில் உள்ள நீர்வரத்துக் கால்வாய்கள் வழியாக பள்ளப்பட்டி ஏரியில் நிரம்பியது. இதனால் ஏரிக்குச் செல்லும் ஓடையில் காட்டாறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதையடுத்து தோப்புக்காடு, பெரமனூர், கோவிந்தகவுண்டர் தோட்டம், டிவிஎஸ், சாமிநாதபுரம், அரிசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஓடையைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அதிகாலை நேரத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பதற்றம் அடைந்தனர். முதியவர்கள், குழந்தைகளை உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ருக்மணியம்மாள் (75) என்பவரின் வீட்டுக்குள் 4 அடி உயரம் வரை தண்ணீர் புகுந்ததால் அவரால் எளிதில் வெளியே தப்பிச்செல்ல முடியவில்லை. அவருடைய கூச்சல் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல், சாமிநாதபுரம் டாக்டர் ரத்தினம் தெருவில் தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (80) என்ற மூதாட்டியின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. எழுந்து நடக்கவே சிரமப்பட்டு வந்த அவரும், காப்பாற்ற ஆளின்றி நீரில் மூழ்கி இறந்தார்.
மூதாட்டிகள் இருவர் வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவமே அப்பகுதியினருக்கு செவ்வாய்க்கிழமை (செப். 6) காலையில்தான் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று மூதாட்டிகளின் சடலங்களை மீட்டனர். இரண்டு சடலங்களும் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ ராஜேந்திரன், பார்த்திபன் எம்.பி., மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள் கலையமுதன், உமாராணி ஆகியோர் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.