சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. அப்போது, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் என்ற இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் தலைமையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒப்பந்தங்களால் ரூபாய் 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் வருவதுடன் 70,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொழில் நிறுவனங்களின் தொழில்கள் சிறக்க தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் ஒரு குடையின் கீழ் தொழில்நுட்ப சேவைகள் அளிக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது வரலாற்று சாதனை. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14 ஆம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே இத்தகைய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளோம். மேட் இன் தமிழ்நாடு பொருட்கள் உலகின் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும்.
தொழில்துறையைத் தங்கமாக மாற்றியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. துணிச்சலாக செயல்படக் கூடிய தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவது தான் நோக்கம். தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்தில் முதல்முறையாக பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலையைக் கொண்டு வந்திருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முனையமாக தூத்துக்குடி மாறும். புதிய முதலீடுகளில் 68% தென் மாவட்டங்களில் முதலீடு செய்யப்படவுள்ளன. இன்று அடிக்கல் நாட்டப்பட்ட 21 திட்டங்களில் 20 திட்டங்கள் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கொண்டு வரப்பட்டவை" எனத் தெரிவித்தார்.