Skip to main content

கனமழை எச்சரிக்கை; களையிழந்த நாகை துறைமுகம்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Heavy rain warning;Nagai Harbour

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்து வரும் நிலையில், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசப்படும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.

 

கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று ஏற்கனவே மீன்வளத்துறை எச்சரிக்கை விட்டிருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் நாகை மீன்பிடித் துறைமுகம் மழை காரணமாகக் களையிழந்து படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் நேற்று மிகக் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மெரினா கடற்கரை ஒட்டிய பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அம்பத்தூரில் 9.5 சென்டிமீட்டர் மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 9.4 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 8.5 சென்டிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது.

 

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 24 அடியில் 22 அடி நீர்மட்டம் தாண்டி உள்ளது. வினாடிக்கு 278 கன அடியிலிருந்து 440 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 25 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் புழல் ஏரிக்கும் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 149 ஏரிகளில் 75 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்