ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நம்பியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கனமழை பெய்தது. எம்மாம் பூண்டி, சாவக்கட்டுபாளையம், குப்பிபாளையம், பட்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் காலை வரை கனமழை கொட்டியது. இதில் நம்பியூர் பஸ்நிலையம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது பெரியார் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் புகுந்ததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இரவு மூன்று மணி முதல் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அனைத்து கட்சியினரும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றனர்.
மேலும் நம்பியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சி கோரமடைபுதூர் பகுதியை முழுமையாக வெள்ளம் சூழ்ந்தது. இதில் காளியம்மாள் என்பவர் உயிரிழந்தார். காரமடை புதூர் பகுதி தீவுபோல் மாறியதால் உடல்நிலை சரியில்லாத காளியம்மாவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் சாவக்கட்டுபாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.