ஆசனூர் - கொள்ளேகால் சாலையில் தரைப் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மலைக்கிராம மக்கள் தவித்தனர்.
தாளவாடி அடுத்துள்ள ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 முதல் 5 மணிவரை குளியாடா, திம்பம், ஒசட்டி, தேவர் நத்தம், மாவள்ளம் மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பலத்த மழையால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும், கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப் பாலத்தைக் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது.
இரவு 7 மணி முதல் நீர் பாலத்தை மூழ்கடித்துச் சென்றதால் அப்போது முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர் நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைக் கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் செல்லும். அதேபோல் சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மாலை 3 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மலைக்கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர். குழந்தைகளை வைத்துக் கொண்டு பெண்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதே போல் தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளான எரகனள்ளி, சிமிட்டள்ளி, ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம், போன்ற பகுதிகளில் மதியம் 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழை பெய்தது.