திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் பல்கலை சார்பாக செயல்படும் கிராமிய சுகாதாரம் மற்றும் துப்புரவு ஆய்வாளர் பட்டயப்படிப்பு துறையில் சுகாதார அலுவலராக பணிபுரியும் டாக்டர் எ.ரெங்கநாதன் என்பவர் மாணவர் - மாணவியர் மத்தியில் சாதி, அரசியல் மற்றும் தீண்டாமை கருத்துக்களை பற்றியும், சனாதனத்திற்கு ஆதரவாகவும் திராவிடத்திற்கு எதிராகவும், சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் மாணவ-மாணவிகள் மத்தியில் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மாணவர்களின் சமூக குறித்து இழிவாக பேசியும் அவர்களை கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்றும், குலத்தொழிலை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு சமூகத்தினரையும் பற்றி அவதூறாக பேசி உள்ளார். இதுபோக திராவிடம் என்பது குடிக்க செய்து குடியைக் கெடுக்கும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி திராவிடத்திற்கு எதிராக எழுதினால் இன்டெர்னல் டெஸ்ட்டில் கூடுதலாக மதிப்பெண்கள் தருவேன் என அவர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கள் துறை தலைவர் ஜான்சிராணி அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். பட்டய படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 35 பேரும் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு துறை முதல்வர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், சில மாணவ அமைப்புகளுக்கும் புகார் மனுக்களை மாணவர்கள் அனுப்பி உள்ளனர். இதை கேள்விப்பட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரின் உத்தரவுப்படி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் குட்டி என்ற துரைப்பாண்டி மற்றும் வழக்கறிஞர் சூசைராபர்ட், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் ஆகியோர் காந்திகிராமம் பல்கலை. பதிவாளர் இராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தனர்.
பல்கலை. பதிவாளரிடம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் பேசும்போது, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை பற்றியும், திராவிடம் குறித்தும், சுகாதார அலுவலர் ரங்கநாதன் பேசி உள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்கலைக்கழகத்தின் மீது ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றதோடு எங்கள் கட்சி தலைமை உத்தரவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என பேசினார். அப்போது பதிவாளர் இராதாகிருஷ்ணன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் நிருபர்கள் மத்தியில் பேசிய கிழக்கு மாவட்ட மாணவரணி அஸ்வின் பிரபாகரன், சனாதனத்திற்கு ஆதரவாக பல்கலை. விதிமுறைகளை மீறி சுகாதார அலுவலர் பேசியுள்ளார். இதுதவிர திராவிடம் குறித்து அவதூறு பரப்பும் வண்ணம் செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரிடம் படித்த 35 மாணவ-மாணவிகள் மனதளவில் பாதிப்படைந்துள்ளனர். அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரைன் உத்தரவுப்படி நாங்கள் இன்று பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது சம்பந்தமாகக் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாரிடம் கேட்டபோது, காந்திகிராம பல்கலையில் சுகாதாரத்துறையில் துப்புரவு ஆய்வாளர் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அந்த சுகாதார அலுவலர் (ரெங்கநாதன்)அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகளே புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதன்மீது இதுவரை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு அரசியல் ரீதியாக எங்க தலைவரையும், எங்க இயக்கத்தையும் பற்றியும் அவதூறு பரப்பும் வண்ணம் வலைதளங்களில் செய்திகளை பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாகச் சுகாதார அலுவலர் ரெங்கநாதன் மீது காந்திகிராம பல்கலை பதிவாளர் அவர்களிடம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அந்த சுகாதார அலுவலர் ரெங்கநாதன் மீது துறைரீதியாகவும், சட்டப்படியாகவும் நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும். தவறினால் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.