இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவந்த நிலையில், அதன் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு அமல், மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவை கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும், கரோனாவிலிருந்து பெரிதாக நம்மைக் காக்கும் கருவியாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தபோது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. ஆனால், அதன்பிறகு தொடர்ச்சியான விழுப்புணர்வு மூலம் தற்போது மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவருகிறது.
தமிழ்நாடு அரசும் மாவட்டங்கள் வாரியாக தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது. சில சமயங்களில் கரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகளும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம், கரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையைக் குறைப்பதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அரசு ஒருபுறம் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்திவந்தாலும், தன்னார்வ அமைப்புகளும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில் இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அரங்காபுரம் பள்ளியில் நாளை (03.07.2021) கரோனா தடுப்பூசி முகாமை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாணாவரம், எய்ட் இந்தியா மற்றும் அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தடுப்பூசி முகாம் அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முகாமில், அதே ஒன்றியத்தைச் சேர்ந்த அரங்காபுரம், மாங்குப்பம், லட்சுமிபுரம், ரசூல் பேட்டை, அருந்ததி பாளையம் ஆகிய பகுதி மக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி முகாமில் அப்பகுதி மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன், எய்டு இந்தியா தொண்டர்கள் ஆகியோர் மக்களை சந்தித்து அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் அழைப்பிதழ் வைத்து அழைத்துவருகின்றனர். தடுப்பூசி முகாம் நடத்துவது மட்டுமின்றி, அதற்கு மக்களைத் தங்கள் வீட்டு சுபகாரியத்திற்கு அழைப்பதுபோல் அழைத்துவருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.