கோவையை அடுத்த கோவைப் புதூரைச சேர்ந்தவர் நடராஜன். இவரது பசுமாடு அங்குள்ள பாரதி பார்க் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. தொடர் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியில் பசு மாடு விழுந்தது. முன்றுக்கு ஐந்து அளவுள்ள இத்தொட்டியில் விழுந்த வயிற்றில் குட்டியுடன் உள்ள பசு மாட்டை மீட்க அப்பகுதியினர் தீவிர முயற்சி செய்தும் முடியாததால், தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி, உயிருடன் பசுமாட்டை மீட்டனர்.
கோவை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மழை சேதப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், சென்னையில் இருந்து மீட்பு பணிக்காக கோவை வந்த வீரர்கள், வயிற்றில் குட்டியுடன் இருந்த பசு மாட்டை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொட்டியில் இருந்து மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.