நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் பார்த்திபன், நடிகர் நாசர், ஜெயராம், நகைச்சுவை நடிகர் செந்தில் என பலரும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மயில்சாமியின் மறைவு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர், ரசிகர்களின் அன்பைப் பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மயில்சாமி அண்ணன் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி. திரையுலகம் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் மிகப்பெரிய இழப்பு. நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி மிக நல்ல மனிதர். அவருடன் நிறைய பணியாற்றியுள்ளேன். மிகப் பாசமாகப் பழகுவார். குடும்பத்தில் ஒருவர் மாதிரி பேசுவார்.
10 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார். ஆனால், ஒரு முறைகூட சொந்த விஷயத்திற்கு உதவி கேட்டதில்லை. பொதுநலனுடன் பேசக்கூடியவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர். மிகப்பெரிய இழப்பு. கட்சி சார்பு இல்லாமல் பழகுபவர். மிகப்பெரிய சோகத்தை அவரது இழப்பு ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எம்மனசு தங்கம் படத்திலும் நெஞ்சுக்கு நீதி படத்திலும் என்னுடன் நடித்தார். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்கள் என்னுடன் தான் இருந்தார். அண்ணன் மாதிரி தான்” எனக் கூறினார்.