தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடை மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரைச் சந்தித்திருந்தார்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்த நிலையில், சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இணைய வழி சூதாட்டங்களை தடுப்பதற்காகவும், ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தருவதைப் பற்றிய ஆளுநரின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறோம். இன்றைக்கும் ஆளுநரிடத்தில் ஒரு அரை மணி நேரம் அதைப் பற்றிய விளக்கங்களை எல்லாம் தந்திருக்கின்றோம். ஆளுநரும் இன்னும் அந்த மசோதா எனது பரிசீலனையில் இருக்கிறது என தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள். விரைவில் நான் எனது முடிவை தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவசரச் சட்டத்திற்கும் இந்த சட்டத்திற்கும் வித்தியாசம் கிடையாது. அவசரச் சட்டம் இயற்றப்பட்ட போது ஆன்லைனில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 17. இப்பொழுது அதனுடைய எண்ணிக்கை 25. நேரில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கே ப்ரோக்ராம் செட்டப் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பணத்தைக் கொள்ளையடித்துக் கொள்வார்கள். அது மக்களுடைய பணம். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எஸ்.எம்.எஸ் வருகிறது. உடனே வந்து விளையாடுங்கள் உங்களுக்கு 8000 தந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதை நம்பி விளையாடப் போகிறார்கள். ஆனால், இறுதியில் எட்டு லட்ச ரூபாய் இழந்துவிட்டு அந்த குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. எனவே, இதைத் தடை செய்ய வேண்டும். எனவே, இதைத் தடை செய்ய ஒப்புதல் தர வேண்டும் என தமிழக முதல்வர் சார்பில் ஆளுநரிடம் கேட்டுள்ளோம். இப்பொழுது வரை 21 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது'' என்றார்.