ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவரும் நிலையில், அவரது மனைவியும், யூடியூப் சேனலின் நிர்வாகியுமான கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, கிருத்திகாவை நீதிமன்றக் காவலில் ஜூன் 30ஆம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கிருத்திகாவை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக முன்ஜாமீன் கேட்டு மதனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் யூடியூபர் மதனின் சேனலைப் பின்தொடர்வோரில் 30 சதவீதம் பேர் பள்ளி மாணவர்கள் என காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. அதனையடுத்து, ''மதன் பேசியதைக் காது கொடுத்து கேட்க முடியவில்லை. குழந்தைகளைக் கெடுக்கும் வகையிலும், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மதன் ஆடியோவின் ஆரம்பமே கேட்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மதனின் பேச்சை நீங்கள் காது கொடுத்து கேட்டுள்ளீர்களா?'' எனக் கேட்ட நீதிபதிகள், மதனின் பேச்சைக் கேட்டுவிட்டு நாளை (18.06.2021) வருமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.