கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்க முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ள யுவன் தனது சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி 'யுவன் 25' என்ற கான்செர்ட் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா ''இந்த விழாவிற்கு 'யுவன் 25' என வைத்துள்ளீர்கள். ஆனால் நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நான் இசையமைத்த ஒரு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவருடைய ட்யூனை நான் உபயோகப்படுத்தி இருக்கிறேன். அப்போது அவருக்கு வயது வெறும் 5. அப்படி என்றால் யுவன் இன்டஸ்ட்ரிக்கு வந்து 25 வருடங்களா ஆகிறது? அதை விட அதிகம் இல்லையா? அதுவும் அந்த பாடலில் அவர் ஒரு phase தான் டியூன் அமைத்து இருந்தார். மற்ற phase ஐ நான்தான் நிறைவுசெய்து பாடலை முழுமையாக்கினேன். யுவனை தவிர இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் எல்லாரும் ஒரே ஒரு phaseஐ வைத்துக்கொண்டு முழுப்பாடலையும் உருவாக்கி விடுகின்றனர். அதுவும் இதைத் தயார் செய்வதற்கே மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்'' என கிண்டலாக பேசினார்.