நான் 150 மெடலுக்கு மேல வாங்கிட்டேன். ஒலிம்பிக் போட்டிக்கும் போய் வந்துட்டேன் என, ஒற்றைக் கையுடன் நம்பிக்கையோடு பேசும் மாற்றுத்திறனாளி இளைஞரின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிக்கு அருகே உள்ளது கீரமங்கலம். இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக மாரத்தான் போட்டி நடைபெற்றது. சுமார் 400 பேர் கலந்துகொண்ட மாரத்தான் போட்டியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பச்சைக்கொடி காட்டி போட்டியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, இந்த மாரத்தான் போட்டி குறித்து அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது ''விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றுதான் மாரத்தான். விளையாட்டுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, நம்முடைய உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களின் பார்வையும் திரும்புகிறது. அதனால்தான், மாரத்தான் விழிப்புணர்வு சிறப்பாக உள்ளது'' எனப் பேசியுள்ளார்.
இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் முதல்முறையாக ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர். 21 கி.மீ மற்றும் 10 கி.மீ தூரத்தை முழுமையாகக் கடந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். அதுமட்டுமல்லாமல், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 37 வயதான கலைச்செல்வன். ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் 21 கி.மீ தூரத்தையும் முழுமையாக ஓடி வந்தார்.
அப்போது அவர் கூறும்போது ''கடந்த 1999 ஆம் ஆண்டில் நடந்த ஒரு விபத்தில் என்னோட ஒரு கை அகற்றப்பட்டது. அதிலிருந்து, என்னுடைய 40 வயதுக்குள் 400 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடித்தேன். ஆனால் 37 வயதிலேயே 400 மாரத்தான்களை கடந்துவிட்டேன். அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற 401ஆவது மாரத்தானில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது'' என மாற்றுத்திறனாளி இளைஞரான கலைச்செல்வன் பேசியிருந்தார்.