கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மணலூர்பேட்டை, இப்பகுதியில் உள்ளது கொழுந்திராம்பட்டு. இங்கு வனத்துறைக்கு சொந்தமான பரந்து விரிந்த தைல மரக் காடுகள் உள்ளன. இந்த காட்டுப் பகுதியில் சுமார் 40 வயது உள்ள ஒரு பெண்ணின் சடலம் பாதி எரிந்தும் எரியாத நிலையில் கிடந்துள்ளது. வனத்துறை காட்டில் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற பொதுமக்கள் எரிந்தும் எரியாத நிலையில் கிடந்த பெண்ணின் உடலை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து மணலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்தும் எரியாத நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எரிந்தும் எரியாத நிலையில் வனப்பகுதியில் கிடந்த அந்தப் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வனப்பகுதி காட்டுக்குள் அவர் எப்படி வந்தார்? அவரை யாராவது பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து போட்டு விட்டு சென்றனரா? இப்படி பல்வேறு கேள்விகளை முன் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பெண்ணுடல் கிடந்த வனப் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அந்தப் பெண் உடல் கிடந்த இடத்தில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதுகுறித்த விசாரணையை திருக்கோவிலூர் டி.எஸ்.பி கங்காதரன், ஆய்வாளர் பாபு, மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.